1967 திமுக தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. தி.நகரில் எஸ்.ஜி.எஸ். திருமண மண்டபத்தில் சிறப்புக்கூட்டம். வெற்றி பெற்றவர்களுடன் அண்ணா மேடையில் அமர்ந்திருக்கிறார். வெற்றிபெற்றவர்களின் பெயர்கள் வரிசையாக அறிவிக்கப்படுகின்றன. அதில் விருதுநகர் பெ.சீனிவாசன் என்ற பெயர் அறிவிக்கப்பட்டபோது கைதட்டல் விண்ணைப் பிளக்கிறது.
அறிஞர் அண்ணா சங்கடத்துடன் எழுந்து, ‘விருதுநகரில் நம்மோடு காமராசர் போட்டியிட்டார். நம்முடைய தலைவர்கள் எவரும் அவரை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யவில்லை. ஆனாலும் அடித்த சூறாவளியில் காமராசரும் தோற்றுவிட்டார். இதை நான் எதிர்பார்க்கவில்லை. அவர் சட்டமன்றத்தில் இருந்தால் நம்மை வழி நடத்துவார். தவறு நடந்தால் திருத்துவார். அந்த வாய்ப்பை இழந்துவிட்டோமே என்று மனம் புண்பட்டுக் கிடக்கிறது.” என்றார்.
1967 தமிழகத்துக்கு மட்டுமல்ல அகில இந்திய அளவிலேயே கூட மிகவும் திருப்புமுனையாக அமைந்த தேர்தல். அகில இந்திய அளவில் நேருவின் மரணத்துக்குப் பின்னர் தேசியக் கட்சியான காங்கிரசின் ஆதிக்கம் குறைந்து பிராந்திய கட்சிகளின் ஆதிக்கம் எழ ஆரம்பித்தகாலம் அது. தமிழகத்தைப் பொறுத்தவரை அதன்பின்னர் தேசியக் கட்சிக்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது. அதற்கு 1971-ல் திமுக மீண்டும் கருணாநிதியின் தலைமையில் பெற்ற வெற்றி ஒரு முக்கிய காரணம். காங்கிரஸ் இரண்டாக உடைந்திருந்த நிலையில் இந்திரா காங்கிரஸ் திமுகவுக்கு ஆதரவு தந்தது. அடுத்த தேர்தலில் நியாயமாகப் பார்த்தால் காங்கிரஸ் திமுகவை எதிர்கொண்டிருக்க வேண்டும். ஆனால் மத்தியில் இருந்த ஆட்சியாளர்கள் திமுகவை உடைப்பதில் கவனம் செலுத்தியதில் அதிமுக என்ற கட்சிஉருவானது. அதிமுக உருவானது என்பது உண்மையில் திராவிட அரசியலுக்கு நன்மை செய்வதாகவே அமைந்தது. ஏனெனில் தமிழகத்தில் ஆட்சி என்பது திராவிடக் கட்சிகளுக்கு இடையிலான ஆட்சி என்றே நீடிக்க இதுதான் காரணமாக அமைந்தது. தேசியக் கட்சிக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்பதுதான் கடந்த சுமார் 50 ஆண்டுகால அரசியல் வரலாறு.
ஐம்பது ஆண்டுகள் என்பது மிகப்பெரிய காலகட்டம். அகில இந்திய அளவில் அரசியல் மிகவேகமாக மாறிவிட்டது. காங்கிரஸ் கட்சி படுதோல்வி கண்டு, பாஜக எதிர்பார்க்க முடியாத பெருவெற்றியை பெற்றுள்ளது. மாநிலங்களிலும் அதன் வெற்றிகள் தொடர்ந்துவருகின்றன. ஜார்க்கண்ட் வெற்றியைத் தொடர்ந்து அது பீகாரைக் குறிவைத்துள்ளது. அதே சமயம் அக்கட்சியின் கூர்மையான கண்கள் தமிழகத்தையும் குறிவைத்துள்ளன. இங்கே பாஜக வேரூன்ற முடியுமா?
சமீபத்தில் தமிழகம் வந்த பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா, ‘தமிழகத்தில் 60000 பூத்கள் உள்ளன. ஒரு பூத்துக்கு 100 உறுப்பினர்களைச் சேருங்கள். 60 லட்சம் பேர் சேர்ந்தால் அடுத்த ஆட்சி நம்முடையது தான்’ என்று சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். தமிழக தேர்தல் அரசியலில் பூத் குழு அமைப்பதற்கேகூட பாஜகவுக்கு உறுப்பினர்களோ வலிமையோ இல்லை என்பதுதான் இன்றுவரை உண்மை நிலவரம். ஆனால் பாஜக அகில இந்திய அளவிலும்கூட இதுபோன்ற ஒரு நிலையில் இருந்துதான் மெல்ல வளர்ந்துவந்து இன்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது என்பதை அறிந்தவர்கள் தமிழக நிலையை உன்னிப்பாகக் கவனித்துவருகிறார்கள்.
“தமிழ்நாட்டில் வெற்றிபெரும் அரசியல் கணக்கு என்பது பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் சினிமா நடிகர்கள் கூட்டணி. இதைச் செய்யவேண்டும் என்கிற முயற்சியில் பாஜக இறங்கி எவ்வளவோ நாட்கள் ஆகிவிட்டன. பாஜக மாநிலத் தலைவராக மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு வாய்ப்பளித்ததும் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் போன்றவர்களுக்குத் தொடந்து வலைவீசி வருவதும் இதையே காட்டுகின்றன.” என்று சொல்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத அரசியல் விமர்சகர் ஒருவர்.
ஆனால் திராவிடக் கட்சிகளின் செல்வாக்கில் இருக்கும் தமிழ்நாட்டில் சலனங்களை வேண்டுமானால் உருவாக்கலாம் ஆனால் வேரூன்ற முடியாது என்கிறார்கள் திராவிட இயக்கப் பார்வையாளர்கள்.
ஆனால் வளர்ச்சி, ஊழலற்ற ஆட்சி என்ற குரலுக்கு புதிய தலைமுறையிடம் செல்வாக்கு பெருகுகிறது. திராவிடக் கொள்கைகளை வளர்ச்சியுடன் வாய்ப்புகளுடன் முடிச்சிட்டு பேசாவிட்டால் எல்லாம் கலகலத்து விடும் என்ற பார்வையும் உள்ளது. ஆனால் இதைப் பேசக்கூடிய நிலையில் இரு கட்சிகளுமே இந்த நிமிடத்தில் இல்லை என்பதுதான் உண்மை.
ஜனவரி, 2015.